27 Oct 2013

ராமகிரி

   
      ஆந்திராவில் புத்தூருக்கு அருகில் புத்தூர் - சுருட்டப்பள்ளி மார்க்கத்தில் ராமகிரி என்றொரு இடம் உள்ளது. அதன் வரலாறு (நான் கேட்டது) 
         இராமாவதாரத்தில் இராமபிரான் இராவணனை கொன்று சீதையை மீட்டு அயோத்திக்கு திரும்புகிறார். அப்போது சிவபக்தனான இராவணனை கொன்றதால் தோஷம் நீங்க இராமேஸ்வரத்தில் சிவலிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட தீர்மானித்தார். ஆகையால் காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டுவருமாறு ஹனுமானுக்கு கட்டளையிட ஹனுமான் காசியை நோக்கி பறந்தார். வழியில் தற்போது குறிப்பிட்ட ராமகிரியில் பைரவர் குடியிருந்தார். அவர் ஹனுமனின் காரியநோக்கத்தை அறிந்து இங்கு ஒரு காசி லிங்கம் இருந்தால் நல்லதென எண்ணினார். ஆனால் ஹனுமனோ இராமனின் கட்டளைக்கிணங்க சென்றுகொண்டிருக்கிறார். மற்றெவர் பணித்தாலும் மசியமாட்டார் என்பதை அறிந்த பைரவர் வாயுபகவானை பிரார்த்தித்து தனது விருப்பத்தைச் சொன்னார். வாயுபகவானும் பைரவரின் வேண்டுதலுக்கு ஒப்புக்கொண்டார். 
      ஹனுமான் காசியில் கங்கைக் கரையிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்புகையில் இராமகிரிக்ஷேத்திரத்தை நெருங்கும்போது பலத்த காற்று வீச ஹனுமான் மேற்கொண்டு நகர மிகவும் சிரமப்படுகிறார். பலமிழந்து நீர் அருந்த குளம், குட்டைகளைத் தேடுகிறார். ஆனால் காசி செல்லும்போது இருந்த நீர்நிலைகள் இப்போது அவர் கண்ணில் தென்படவில்லை. 
       மிகவும் வருந்தி இறுதியில் ஓர் இடத்தில் குளம் இருப்பதைக் கண்டு சந்தோஷத்தில் நீர் அருந்த குளத்தை நெருங்கினார். பகவானது லிங்கத்தை பூமியிலிருந்து எடுத்தால் ஓரிடத்தில் மட்டுமே பிரதிஷ்டை செய்யவேண்டுமென்பதை அறியாத வானரசேனன் லிங்கத்தை குளத்தினருகில் வைத்துவிட்டு தாகம் தனிக்கச் சென்றார். திரும்பி வந்து லிங்கத்தை கையிலெடுக்க பலவாறு முயன்றும் தோற்றுப்போய் இறுதியில் தன் வாலால் லிங்கத்தைக் கட்டி இழுக்க முயன்றார். அப்போதும் வரவில்லை. 
             அப்போது அங்கு தோன்றிய பைரவர் நிலைமையை எடுத்துச்சொன்னார். என்ன செய்வது, வாதிடவோ, வம்பிழுக்கவோ இது சமயமல்லவே, போகட்டுமென விட்டுவிட்டு மீண்டும் காசி சென்று மற்றொரு சிவலிங்கத்தை கொண்டு வந்து இராமபிரானிடம் கொடுக்க, ஹனுமான் வர மிகவும் தாமதமானதால் மண்ணினாலேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துவிட்டார். ஹனுமான் கொண்டுவந்த சிவலிங்கத்தையும் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். 
              ஹனுமான் வாலினால் இழுத்து எடுக்கமுயன்றதால் லிங்கத்தில் வாலின் தழும்புகளை இன்றும் காணமுடியும். ஆகையால் லிங்கம் வடக்குபுறமாக சிறிது சாய்ந்தும் உள்ளார். வாலினால் கட்டி இழுத்ததால் ஈஸ்வரனுக்கு வாலீஸ்வரன் என்றே பெயர். இங்குள்ள குளத்தின் நீர் மிகவும் சுவையாக உள்ளது.திருமண, குழந்தைபாக்கியமற்றவர்களின் குறைகளை இங்குள்ள பைரவர் விரைவில் தீர்த்துவைப்பதால் மிகச் சிறந்த பரிஹாரத்தலங்களுல் ஒன்றாக திகழ்கிறது.

No comments: