10 Sept 2014

பார்ப்பனர் - அவப்பெயரா, அவா பெயரா?

     பார்ப்பனர் - பார்ப்பு என்பது இரு பிறவியுடையது எனப்பொருள். தொல்காப்பியத்தில் பறவைக்கு பார்ப்பு எனப் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, முட்டையாக ஒரு பிறவியும், முட்டையிலிருந்து உயிராக மீண்டும் ஒரு பிறவியும் எடுப்பதால் இரு பிறவியை - பார்ப்பை உடையது பறவை. எனில் இரு பிறவி உடையவற்றை பார்ப்பு என்பர். ஸம்ஸ்க்ருதத்தில் த்விஜ: என்றால் இரு பிறவி உடையவன் எனப்பொருள். த்வி: - இருமுறை, ஜாயதே - பிறக்கிறான், இதி - எனப்படுவதால், த்விஜ: - த்விஜன் என்று பெயர். 
         இங்கு ஒரு விஷயம் கூறவேண்டும். ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள அனைத்து சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ராமன் என்கிறோம். ராம என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ரமு என்பதாகும். அதன் பொருள் ஆனந்தப்படுத்துவது அல்லது விளையாடுவது. யோகிகளை ஆனந்தப்படுத்துவதால் அவருக்கு ராமன் எனப்பெயர். தமிழிலும், ஆங்கிலத்திலும் மற்ற பிற மொழிகளிலும் இவ்வாறு உள்ளனவா எனத் தெரியவில்லை. அறிந்தவர்கள் விளக்கலாம். எடுத்துக்காட்டாக தமிழில் பறவை என்கிறோம். அதன் வேர்சொல் என்ன, பறவை என்பதன் விளக்கம் என்ன? ஆங்கிலத்தில் Chair என்கிறோம். அதன் பொருள் என்ன? தமிழ் என்ற சொல்லின் பொருள் என்ன? - மொழி பாகுபாட்டிற்காக இவ்வினாக்கள் அல்ல. அறிந்துகொள்வதற்காகவே.  ஆங்கிலத்தில் உள்ள சொற்களுக்கு பொருளில்லாமல்போகலாம். ஏனெனில் ஆங்கிலத்தின் மூலபாஷை க்ரீக்கும், லத்தீனும் என்பதால் அம்மொழிச் சொற்களே இருக்கக்கூடும். ஆனால் தமிழிற்கு மூலபாஷை என்று கிடையாது. ஸம்ஸ்க்ருதத்துடன் கலந்திருப்பதால் ஸம்ஸ்க்ருதத்தைப் போன்றே தமிழிலுள்ள சொற்களுக்கும் வேர்ச்சொற்கள் இருந்திருக்கவேண்டும் அல்லது இருக்கவேண்டும். 
     சரி. விஷயத்திற்கு வருவோம். பார்ப்பு என்பது இருபிறவி உடையவற்றைக் குறிக்குமல்லவா, த்விஜன் எனப்படும் ப்ராஹ்மணனர்கள் வேறெந்த மொழிகளிலும், தேசங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இறையன்பற்றவர்களாலும், Bahut அறிவாளர்களாலும் கூட மிக்க மரியாதையோடு (தன்னிலை மறந்து - தன் நிலை மறந்து) பார்ப்பனர் என்று அழைக்கப்படுகிறார்கள். தாயின் கருவிலிருந்து பிறப்பது ஒரு பிறவி எனவும், புருஷார்த்தங்களைக் காக்கவும், ச்ருதி, ஸ்ம்ருதிகளை அறிய உபவீதம் அணியும்போது இரண்டாவது பிறவி எனவும் கொண்டு த்விஜன் என அறியப்படுகிறான். 134வது குறளில் வள்ளுவர் பார்ப்பான் என்றும், 8வது குறளில் அந்தணன் என்றும், 560வது குறளில் அறுதொழிலோர் என்றும் குறிப்பிடுகிறார். ஐயா என்பதே மரியாதைநிமித்தமான சொல். அதையும் மரியாதையிட்டு ஐயர் எனவும் விளிக்கின்றனர். “ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும் அறம் புரி அந்தணர்” என்பது பதிற்றுப்பத்து பாடல். அந்தணர்களுக்கு இவை ஆறும் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. இதையே ஸ்ம்ருதிகளில் அத்யாபனம் அத்யயனம் யஜனம் யாஜனம் ததா, தானம் ப்ரதிக்ருஹம் சைவ ப்ராஹ்மணானாம் அகல்பயத் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி அந்தணர் என்பவரும் ப்ராஹ்மணரே. சில விளக்கவுரைகளில் சான்றோர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. :-) . "விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப" என்கிறது பரிபாடல் (82). 
      மேலும்,
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று,
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு. (பரிபாடல் திரட்டு 2:60,61)
இதன் பொருள் - அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்கியே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது. ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
இது மட்டுமின்றி, 

"தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட” என மதுரை காஞ்சி 656வது பாடலிலும், 

"மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்" என திருச்சீர் அலைவாயிலும், 

"மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" என திரு ஏரகத்திலும், 

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து (25) என்று, 

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் (30) என்றும் தொல்காப்பியத்திலும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ப்ராஹ்மணர்கள் தமிழர்களாக தொன்மைதொட்டே தமிழோடு பிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எனவே, ப்ராஹ்மணர்கள் தமிழர்களே. பார்ப்பனர் என்பதும், இன்னபிற மேற்கோள் காட்டியச் சொற்களும் ப்ராஹ்மணர்களையே குறிக்கின்றன. 

No comments: