14 Nov 2013

கொஞ்சமா - இலவசம்

     "அரசு இலவசமாக பயனாளிகளுக்கு பொருட்களை தந்துகொண்டிருக்கிறது." இலவசம் என்றால் என்ன என்பது பற்றி எனது சுய(மன)ஆய்வு....
      இந்திய மொழிகளிலேயே முதன்மையானது தமிழும், சம்ஸ்க்ருதமும். ஆகையால் இவ்விருமொழிகளும் அக்காலம் தொட்டே ஒன்றொடொன்று பிணைந்து பேசப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் சொற்கள் சில சம்ஸ்க்ருதத்திலும், சம்ஸ்க்ருதசொற்கள் சில தமிழும் பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு தற்போது பேச்சுவழக்கில் உள்ள தமிழில் பல சொற்கள் சம்ஸ்க்ருதத்திலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. (சம்ஸ்க்ருதம் பேச்சுவழக்கில் இல்லை என்பது பொருளல்ல. இன்றளவும் சம்ஸ்க்ருதம் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் சம்ஸ்க்ருதத்திற்கு மாநிலமொழிகளுக்கு இணையான மதிப்பளிக்கப்படுகிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பிற மொழிகளை வாழவைப்பதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏனோ?) அவ்வாறு தமிழ் மொழியில், தமிழ்நாட்டில் தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் இலவசம் என்பது. இலவசம் என்பது எம்மொழிச் சொல்!(?). தமிழ் காப்பியங்களில் இலவசம் என்ற சொல் உள்ளதா என அடியேன் அறியேன். (அறிந்தவர்கள் தெளிவுபடுத்தலாம்). ஆனால் ஒவ்வொரு முறையும் இலவசம் என்ற சொல்லை உச்சரிக்கும்போதும் அது சம்ஸ்க்ருதசொல் தானோ என்று ஆராயத்தோன்றுகிறது. லவச: (लवशः) என்றால் கொஞ்சமாக என்பது பொருள். தமிழில் ல, ர எழுத்துக்களுக்கு முன்பு இ என்ற எழுத்து வருவது இலக்கணமரபு.  லங்கா என்பது இலங்கை என்றும், ராமன் என்பது இராமன் என்றும், லக்ஷ்மணன் என்பது இலக்குவன் என்றும் லக்ஷ்யம் என்பது இலக்கியம் என்றும், லக்ஷணம் என்பது இலக்கணம் என்றும் கூறுவது போல லவச: என்பது இலவசம் என்று சொல்லப்பட்டுவருவதாகத் தோன்றுகிறது. மேலும் இலவசம் என்பதற்கு கொஞ்சமாக என்று பொருள் சொன்னேன் அல்லவா, அதன்படி முதலில் பொருட்களுட்கு விலையின் முழுத்தொகையையும் கொடுக்காமல் சிறு பங்கு மட்டும் கொடுத்து வாங்குவது என்பது மாறி தற்போது அதுவும் கொடுக்காமல் வாங்குவதே இலவசம் என்றாகிவிட்டது. விலையில்லா என்ற சொல்லுக்கும் இலவசம் என்று தற்போது மாறிவிட்டது என்பது என் கருத்து. . .

No comments: