22 Nov 2013

சல்லிப்பய... (Sallippaya)

         பொதுவாக பேசும்போது யாராவது குறுக்கே பேசினால் சல்லிப்பய மாதிரி பேசாத என்பர். அதென்ன சல்லி? மஹாபாரதத்தில் குறிப்பிடத்தக்கதொரு கதாபத்திரம் சல்லியன் (शल्यः). இவர் மிகச்சிறந்த போராளி. பல வித்தைகளைக் கற்றவர். பாண்டவர்களில் நகுலன் மற்றும் சகாதேவனின் தாயாகிய மாத்ரியின் சகோதரனாவார். மகாபாரதயுத்தத்தில் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக தனது சேனைகளுடன் வந்துகொண்டிருந்த சல்லியனுக்கு மாமன் சகுனியில் ஆலோசனைப்படி விருந்திட்டான் துரியோதனன். விருந்து உண்டு மகிழ்ந்து இவ்வுணவிட்டவருக்கு என் உதவி இருக்கும் என்றுரைத்தார் சல்லியன். பின்னர் அங்கு வந்த துரியோதனன் இவ்விருந்தை நானே படைத்தேன். ஆகையால் நீ எனக்கே உதவிபுரியவேண்டும் என பணித்தான். ஆனாலும் தனது சகோதரின் புதல்வர்களுக்கு உதவிபுரியவந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என எண்ணி தருமரை சந்தித்து தன்னால் பாண்டவர்களுக்கு உதவமுடியாது என்பதையும், நிகழ்ந்தவற்றையும் உரைத்தான். மேலும், தான் துரியோதனின் பக்கத்தில் இருந்தாலும் தருமரின் பக்கத்திற்கே உதவிபுரிவதாகவும் கூறினான் (இந்த அதர்மமே சல்லியன் இறக்கக் காரணமாயிற்று).
           கர்ணனின் தேரோட்டியாகச் சென்ற சல்லியன் பாண்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் கர்ணன் பாண்டவர்களைக் கொல்ல வில்லின் நாணில் அம்பை பொருத்தும்போதும் இடைமறித்து எதாவது கூறிக்கொண்டே இருந்தார். இறுதியாக கர்ணனின் வீரத்தைக் கண்ட சல்லியன் மனம் மாறி கர்ணனுக்கு உதவ முற்பட்டு அர்ஜுனனின் தலையை நோக்கி குறிவைக்கையில் சல்லியன் குறுக்கிட்டு மார்புக்கு குறிவைக்குமாறு உறைக்க கோபமுற்ற கர்ணன் சல்லியனை திட்டியதும், பொறுக்கமுடியாமல் தேரை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார் சல்லியன். அதன்பின் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றான். சல்லியனை தருமரே கொன்றார் என்பது மகாபாரதம். இங்கு கர்ணன் தன் பணியைச் செய்யும்போதெல்லாம் குறிக்கிட்டு பேசிக்கொண்டிருந்த சல்லியனின் மீது கர்ணன் கோபம் கொண்டானல்லவா? இந்நிகழ்வை கருத்தில் கொண்டே சல்லியன் எப்படி ஒரு காரியத்தை செய்யவிடாமல் தடுத்தாரோ, அதே போல் குறுக்கே பேசிக் கெடுக்காதே என்ற பொருளில் சல்லிப்பய மாதிரி பேசாதே என்கிறோம். சல்லியன் என்பதே சல்லி என மருவியுள்ளது. 
(பிரமாணம் - புலவர் கீரனின் வில்லிபாரத உபன்யாசம்)

No comments: